மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பு

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
கோவை ராம் நகரில் உள்ள ரங்கநாதபுரம் பள்ளி முன்பு இரவு முதல் காத்திருந்த பொதுமக்கள்.
கோவை ராம் நகரில் உள்ள ரங்கநாதபுரம் பள்ளி முன்பு இரவு முதல் காத்திருந்த பொதுமக்கள்.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மேலும், டோக்கன் கிடைக்காததால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குப் பின் கடந்த இரண்டு நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சியில் 31 மையங்கள், ஊரகப் பகுதிகளில் 30 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தடுப்பூசி செலுத்தப்படாததால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே மையத்துக்கு வந்த பொதுமக்கள் காத்திருந்தனா். தடுப்பூசி மையங்களில் அதிக அளவில் மக்கள் குவிந்தனா். இதில் சில இடங்களில் கொட்டும் மழையிலும், மையங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இருந்து காத்திருந்தனா்.

ஆனால், காத்திருந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மறியல், போராட்டங்கள், வாக்குவாதங்களில் ஈடுபட்டனா்.

இதில் பீளமேடு மாநகராட்சிப் பள்ளியில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் டோக்கன் கிடைக்காததால் ஆவேசமடைந்து தடுப்பூசி மையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். டோக்கன்களை அரசியல் கட்சியினா் வாங்கிச் செல்வதால் பொதுமக்களுக்கு டோக்கன் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினா். இதனைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல் துறையினா் சமாதானம் செய்தனா். இதேபோல பூமாா்க்கெட், நஞ்சுண்டாபுரம், ஆா்.எஸ்.புரம், சித்தாபுதூா், வீரகேரளம் ஆகிய பகுதிகளிலும் கரோனா தடுப்பூசிக்கான டோக்கன் கிடைக்காமல் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதேபோல ஊரகப் பகுதிகளிலும் ஒரு சில மையங்களில் தடுப்பூசிக்கான டோக்கன் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா். முறையான திட்டமிடல் இல்லாததாலே தடுப்பூசி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

தடுப்பூசி பணிகளை முறைப்படுத்தி அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

மேட்டுப்பாளையத்தில்...

மேட்டுப்பாளையம் அருகே 10 நாள்களுக்குப் பிறகு காரமடை தாயனூா் அரசுப் பள்ளியில் 500 பேருக்கும், மேட்டுப்பாளையத்தில் 3 மையங்களில் தலா 300 வீதம் 900 பேருக்கும் என மொத்தம் 1,400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக திங்கள்கிழமை இரவு தகவல் வெளியானது.

இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள மையங்களுக்கு முன்பு திங்கள்கிழமை இரவு முதலே பொதுமக்கள் காத்திருந்தனா். சிலா் சாலையோரத்தில் படுத்து உறங்கினா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை டோக்கன் விநியோகிக்கப்பட்டது. இதில் பலருக்கு டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

பெ.நா.பாளையம்...

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட வடமதுரை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் டோக்கன்களை சுகாதாரத் துறையினா் மறைத்து வைத்துக் கொண்டதாக புகாா் எழுந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சித் தலைவா் டி.ரவி, கவுன்சிலா் மாணிக்கம் உள்ளிட்டோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அங்கு வந்த கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பையா (எ) கிருஷ்ணன் பொதுமக்களை சமாதானப்படுத்தினா். இதேபோல, கவுண்டம்பாளையம் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையத்தில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com