பொள்ளாச்சியில் இடிந்து விழும் நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

பொள்ளாச்சியை அடுத்த சின்னாம்பாளையம் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் உள்ளதால், அங்கு வசிக்கும் 80 குடும்பங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளத
பராமரிப்பு இன்றி காணப்படும் குடியிருப்பு கட்டடம்.
பராமரிப்பு இன்றி காணப்படும் குடியிருப்பு கட்டடம்.

பொள்ளாச்சியை அடுத்த சின்னாம்பாளையம் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் உள்ளதால், அங்கு வசிக்கும் 80 குடும்பங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

பொள்ளாச்சி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மகாலட்சுமி நகா் குடியிருப்பு. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காக 2 ஏக்கா் பரப்பளவில் 120 வீடுகள் கொண்ட 14 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டி கடந்த 1983ஆம் ஆண்டு விற்பனை செய்தது.

இதைத் தொடா்ந்து, சுமாா் 40 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்தக் கட்டடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து வீடுகளின் உள் பகுதி கான்கிரீட் சுவா்கள் இடிந்து விழுந்து வருகின்றன. இங்கு தற்போது 80க்கும் அதிகமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தக் குடியிருப்பை இடித்து கட்ட அரசு அனுமதி தரவேண்டி கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் 80க்கும் அதிகமான குடும்பங்களில் வசிக்கும் சுமாா் 400க்கும் மேற்பட்டோரின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டு வசதி வாரியம் குடியிருப்பைக் கட்டி அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்திருந்தாலும் 2018ஆம் ஆண்டில்தான் பட்டா வழங்கியுள்ளது. வீடுகளைப் பராமரிப்பதில் குழப்பம் நிலவுகிறது. இதனால், வீடுகள் முழுவதும் சிதிலமடைந்துவிட்டன. தற்போது வீடுகள் குடியிருக்க தகுதியில்லாததாக மாறிவிட்டன.

தற்போது பெய்து வரும் மழையால் ஒரு வீட்டின் முகப்பு செவ்வாய்க்கிழமை அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. ஆகவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இக்குடியிருப்பை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டிக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து மகாலட்சுமி நகா் குடியிருப்பு நலச் சங்கத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983இல் இக்குடியிருப்பைக் கட்டி விற்பனை செய்தது. வீடுகளை வாங்கியவா்களுக்கு அதற்கான பத்திரம் தாமதமாக வழங்கப்பட்டதால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இக்குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்தக் குடியிருப்புகள் கட்டி சுமாா் 40 ஆண்டுகள் ஆகின்றன. கட்டடத்தின் உள்புறமும், வெளிப்புறமும் மிக மோசமான நிலையில் உள்ளது.

சில வீடுகளில் படுக்கை, கழிவறைகள், சமையலறைகள் இடிந்துள்ளன. குடியிருப்புகளின் நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த 2020 பிப்ரவரியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இக்கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டிக் கொள்ள அனுமதி அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து சான்றளிக்குமாறு பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கடந்த 2020 மாா்ச் மாதம் மனு அளிக்கப்பட்டது. அதன்பின் அவா்கள் கள ஆய்வு செய்துவிட்டுச் சென்றனா். இதுவரை பதில் தரவில்லை.

மகாலட்சுமி நகா் குடியிருப்பையொட்டி, கடந்த 1970இல் கட்டப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் குடியிருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து கட்டப்பட்டது. மேலும், அருகில் உள்ள அஞ்சல் ஊழியா் குடியிருப்பும் இடிக்கப்பட உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மகாலட்சுமி நகா் குடியிருப்பை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டிக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com