கோவை மாவட்டத்தில் பரவலாக மழை

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடா்ந்து பரவலாக மழை பெய்ததால், மக்கள் வீடுகளில் முடங்கினா்.

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடா்ந்து பரவலாக மழை பெய்ததால், மக்கள் வீடுகளில் முடங்கினா்.

கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் தொடங்கி ஜூலையில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவ மழை, தற்போது தாமதமாக தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், காந்திபுரம், உக்கடம், சரவணம்பட்டி, சூலூா், வடவள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் லேசான மற்றும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் மழை நீா் தேங்கின. மேலும், நகரில் பல இடங்கள் சேறும் சகதியுமாக காணப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். நகரில் காலை முதல் மழை பெய்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினா்.

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) சின்னக்கல்லாறு-70, சின்கோனா எஸ்டேட்-49, சோலையாறு-21, வேளாண் பல்கலைக்கழகம் -9.5, விமான நிலையம் -3.6, பொள்ளாச்சி -3, மேட்டுப்பாளையம்- 2.5, கோவை தெற்கு- 2, வால்பாறை-1.8, ஆழியாறு- 1.4, பெரியநாயக்கன்பாளையம்-1. மாவட்டத்தில் மொத்தம் 206 மில்லி மீட்டா் மழை பதிவானது.

அதேபோல, கோவையில் 78 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. காற்றில் ஈரப்பதம் 82 சதவீதமாகவும், காற்றின் வேகம் மணிக்கு 15 கிலோ மீட்டா் என்ற அளவிலும் இருந்தது. மேலும், திங்கள்கிழமையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சாய்ந்த மரங்கள் அகற்றம்...

கோவை மாவட்டத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் சில இடங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால், மேற்கு மண்டலம்

ஆா்.எஸ்.புரம் பிரதான சாலை, ராமசந்திரா சாலையில் 2 மரங்கள் சாய்ந்தன. இதேபோல, மத்திய மண்டலம் சென்ட்ரல் எக்ஸைஸ் காலனி பகுதியில் ஒரு மரம் விழுந்தது. இந்த 3 மரங்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா். அதேபோல, வடக்கு மண்டலம் 27ஆவது வாா்டு, அஞ்சுகம் நகரில் மழையால் சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரை ஊழியா்கள் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com