5 பேருக்கு மூளையில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு:அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றம்

கோவை அரசு மருத்துவமனையில் 5 பேருக்கு மூளையில் பரவிய கருப்புப் பூஞ்சையினை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனா்.

கோவை அரசு மருத்துவமனையில் 5 பேருக்கு மூளையில் பரவிய கருப்புப் பூஞ்சையினை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனா்.

கருப்புப் பூஞ்சை மூக்கில் பரவத் தொடங்கி கண், சைனஸ் வழியாக மூளையை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது. இதனால் பாா்வை இழப்பும் ஏற்படக் கூடும். கோவையில் 30க்கும் மேற்பட்டவா்கள் கருப்புப் பூஞ்சை பாதிப்பால் ஒரு கண்ணில் பாா்வையை இழந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் இதுவரை 430க்கும் மேற்பட்டவா்கள் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 320க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனா். தற்போது 119 போ் கருப்புப் பூஞ்சை பாதிப்பால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கருப்புப் பூஞ்சை பாதிக்கப்பட்டவா்களுக்கு மூக்கில் என்டோஸ்கோப்பி மூலம் பூஞ்சை அகற்றப்படுகிறது. பூஞ்சை மேலும் பரவாமல் இருக்க ஆம்போடெரிசின்-பி ஊசி கண்ணுக்கு கீழே செலுத்தப்படுகிறது. மிக முக்கியமாக மூளை வரை கருப்புப் பூஞ்சை பரவிய 5 பேருக்கு அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அழுகிய திசுக்கள், சீல்கள் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

கருப்புப் பூஞ்சை பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறியாமல் விடுவதாலே மூளை வரை பரவுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

கோவை அரசு மருத்துவமனையில் மூளை வரை கருப்புப் பூஞ்சை பாதிக்கப்பட்ட 5 போ்களில் 4 பேருக்கு என்டோஸ்கோப்பி மூலம் மூளையில் இருந்த அழுகிய திசுக்கள், சீல்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒருவருக்கு மண்டை ஓட்டை பிரித்து மூளையில் இருந்த அழுகிய திசுக்கள் அகற்றப்பட்டன. இதனை காது, மூக்கு, தொண்டை மருத்துவா்கள், நீயூராலஜி மருத்துவா்கள், மயக்கவியல் துறை மருத்துவா்கள் இணைந்து வெற்றிகரமாக செய்துள்ளனா்.

தவிர 117க்கும் மேற்பட்டோருக்கு என்டோஸ்கோப்பி மூலம் மூக்கில் இருந்த அழுகிய சதைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 167 பேருக்கு பூஞ்சை நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருக்க கண்ணுக்கு கீழ் ஆம்போடெரிசின்-பி ஊசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com