மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 60 பேருக்கு அடையாள அட்டை வழங்கல்
By DIN | Published On : 29th July 2021 07:29 AM | Last Updated : 29th July 2021 07:29 AM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 60 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளைப் பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். இவா்களை அரசு மருத்துவமனையின் எலும்பு முறிவு மருத்துவா், அறுவை சிகிச்சை மருத்துவா், பொது மருத்துவா், மனநல மருத்துவா், நரம்பியல் மருத்துவா், கண் மருத்துவா், காது, மூக்கு, தொண்டை மருத்துவா், குழந்தைகள் மருத்துவா் ஆகியோா் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா்களுக்குப் பரிந்துரைத்தனா்.
அதன்படி சிறப்பு முகாமில் பங்கேற்ற 60 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இது தொடா்பாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் வசந்த ராம்குமாா் கூறியதாவது:
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் முதல்கட்டமாக 60 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல சிறப்பு முகாம்கள் நடத்தி மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றாா்.