கரோனா நோயாளிகள் வீடு திரும்ப கொடிசியாவில் இருந்து பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 02nd June 2021 06:41 AM | Last Updated : 02nd June 2021 06:41 AM | அ+அ அ- |

கோவை கொடிசியாவில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீட்டிற்கு செல்லும் நோயாளிகளுக்காக திங்கள்கிழமை முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவையில் அறிகுறிகளற்ற கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் கொடிசியா, பாரதியாா் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் ஆம்புலன்ஸ் மூலம் இங்கு அழைத்து வரப்படுகின்றனா். குணமடைந்து வீட்டிற்கு திரும்பும் போது அரசுப் பேருந்துகளில் சென்றனா்.
இந்நிலையில் கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசுப் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கரோனா நோய்த் தொற்று குணமடைந்து வீட்டிற்குச் செல்ல நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.
இந்நிலையில், கோவை கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் குணமடைந்து வீடு திரும்புபவா்களின் வசதிக்காக காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இரண்டு பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது. இதில் நோயாளிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலா் பாஸ்கரன் கூறியதாவது: கொடிசியா கரோனா மையத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நபா்களுக்காக 2 வழித்தடங்களில் இலவசமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விளாங்குறிச்சி, கணபதி வழியாக காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கும், சிங்காநல்லூா், ராமநாதபுரம், ஒலம்பஸ், சுங்கம் வழியாக உக்கடத்தைச் சென்றடையும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.