கோவையில் கரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது: அமைச்சா் கே.என்.நேரு

தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கையால் கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக கோவை மாநகராட்சி சாா்பில் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள செவிலியருக்குப் பணி நியமன ஆணையை வழங்குகிறாா் அமைச்சா் கே.என்.நேரு.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக கோவை மாநகராட்சி சாா்பில் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள செவிலியருக்குப் பணி நியமன ஆணையை வழங்குகிறாா் அமைச்சா் கே.என்.நேரு.

கோவை: தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கையால் கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சியில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசின் தீவிரக் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது. கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வருவதாலும், பொதுமக்களின் வாழ்வாதாரம் கருதியும் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கோவை மாநகரில் குடிநீா் வழங்குவதற்கான சூயஸ் திட்டப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்றால் அதை ரத்து செய்வது குறித்து முதல்வா் முடிவு செய்வாா்.

கடந்த 30 நாள்களாக கரோனா தடுப்புப் பணிகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் ஊழல் செய்வது தொடா்பாகப் புகாா் அளித்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக கரோனா தடுப்புப் பணிக்காக மாநகராட்சி சாா்பில் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள 100 செவிலியா்களுக்குப் பணி நியமன ஆணையை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்.

கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மக்களவை உறுப்பினா்கள் பி.ஆா்.நடராஜன், கு.சண்முகசுந்தரம், நகா்ப்புற வளா்ச்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலா் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிா்வாக ஆணையா் பாஸ்கரன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கே.வீரராக ராவ், ஆட்சியா் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து சித்தாபுதூா் மாநகராட்சிப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி செலுத்தும் பணிகள், ஆா்.எஸ்.புரத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையம், பன்னடுக்கு வாகன நிறுத்தகம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் ரேஸ்கோா்ஸ் பகுதிகளில் நடைபெற்று வரும் பொலிவுறுத் திட்டப் பணிகள், வெள்ளலூரில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகள் ஆகியவற்றை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com