ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய 50 படுக்கைகள்: 3ஆவது அலையை சமாளிக்க சுகாதாரத் துறையினா் ஏற்பாடு
By DIN | Published On : 11th June 2021 05:35 AM | Last Updated : 11th June 2021 05:35 AM | அ+அ அ- |

கோவையில் அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 50 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கரோனா 3 ஆவது அலைக்கான முன்னேற்பாடுகளில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 50 படுக்கைகளுக்கு ஆக்ஸஜின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநா் இ.ராஜா கூறியதாவது: ஊரகப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் ஆகிய மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
இதனைத் தவிா்க்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள 12 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குழாய் மூலம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 படுக்கைகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சூலூா், தொண்டாமுத்தூா், அன்னூா், மதுக்கரை, காரமடை, பெ.நா.பாளையம் ஆகிய வட்டாரங்களில் ஆக்சிஜன் இணைப்புகள் வழங்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற வட்டாரங்களில் தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தயாா் நிலையில் இருக்கவும் மருத்துவ அலுவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றாா்.