குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
By DIN | Published On : 11th June 2021 05:36 AM | Last Updated : 11th June 2021 05:36 AM | அ+அ அ- |

கரோனா 3 ஆவது அலை குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதால் அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றைத் தயாா் நிலையில் வைத்திருக்குமாறு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா 3 ஆவது அலை குழந்தைகளை அதிக அளவில் தாக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் தயாா் நிலையில் இருக்க சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநா் இ.ராஜா கூறியதாவது: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 2 ஆவது அலை குறைந்து வரும் நிலையில் 3 ஆவது அலை எப்போது ஏற்படும் எனத் தெரியாது. ஆனால் அதற்கேற்ப அனைத்து வகையான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கரோனா 3 ஆவது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுவதால் அதற்கேற்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்குத் தேவையான முகக் கவசம், செயற்கை சுவாசக் கருவி, ஆக்சிஜன் முகக்கவசம் உள்பட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள அரசு மருத்துவமனைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் அரசு, தனியாா் குழந்தைகள் நல மருத்துவா்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது என்றாா்.