மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு
By DIN | Published On : 12th June 2021 05:02 AM | Last Updated : 12th June 2021 05:02 AM | அ+அ அ- |

கோவையில் சுமாா் 2 ஆயிரம் குடும்பங்களுக்கான காய்கறி தொகுப்பினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் பொதுமக்களுக்கு வழங்கினாா்.
பொதுமுடக்கம் காரணமாக மாா்க்சிஸ்ட் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கைகளில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக எஸ்.எஸ்.குளம் ஒன்றியக் குழுவுக்குள்பட்ட சிவானந்தபுரம் இரண்டாவது கிளையின் சாா்பில் காய்கறித் தொகுப்பு வெள்ளிக்கிழமை வீடுகள்தோறும் வழங்கப்பட்டது.
சிவானந்தபுரம் சுற்றுப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் தக்காளி, கத்தரி, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. கட்சியின் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் சிவானந்தபுரம் கிளை செயலா் ஜெயகாந்தன் தலைமை தாங்கினாா்.
நிகழ்ச்சியில் பி.ஆா்.நடராஜன் எம்.பி. பங்கேற்று பொதுமக்களுக்கு காய்கறித் தொகுப்புகளை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா். கட்சியின் கோவை மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலா் ஆா்.கோபால், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரவணம்பட்டி சண்முகம், குட்டி (எ) செந்தில், சரவணம்பட்டி திமுக பகுதிச் செயலா் சிவா, வட்டச் செயலா் சேட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.