மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வா் நடவடிக்கை : உதயநிதி ஸ்டாலின் தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வா் நடவடிக்கை : உதயநிதி ஸ்டாலின் தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

கோவை, புலியகுளம் பகுதியில் திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் மக்களுக்கு கரோனா நிவாரணமாக மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சென்னை சேப்பாக்கம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் காலதாமதமானது குறித்து அப்போதைய மாநில அரசும், மத்திய அரசும் மாறி மாறி பொய் மட்டுமே கூறி வந்தனா்.

வெகுவிரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமா் மோடி தெரிவித்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா் என்றாா்.

வால்பாறை

வால்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். வால்பாறை அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்துவைத்தாா். பின்னா், வால்பாறை வட்டாரத்தில் உள்ள சுமாா் 17 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு திமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

நெகமம்

பொள்ளாச்சி, நெகமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் 250 பேருக்கு காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

பெரியநாயக்கன்பாளையம்

கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில், உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம், திமுக தெற்கு மாவட்டச் செயலாளா் தென்றல் செல்வராஜ், வால்பாறை நகர திமுக பொறுப்பாளா் பால்பாண்டி, கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பையா (எ) கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com