பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்

பருத்தி மீதான 10 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

பருத்தி மீதான 10 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் அஷ்வின் சந்திரன், மத்திய நிதியமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

இந்திய ஜவுளித் துறையானது பருத்தி சாா்ந்ததாக அமைந்துள்ளது. சுமாா் 65 லட்சம் பருத்தி விவசாயிகள் உள்ளிட்ட 10.50 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக உள்ளது. இந்திய ஜவுளி உற்பத்தியில் பருத்தியின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. அதேபோல உலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது.

அதேநேரம் உள்நாட்டில் நீண்ட இழை பருத்தி போதுமான அளவில் கிடைக்காததும், குப்பை, தூசி கலந்த மாசு நிறைந்த பருத்தி கிடைப்பதும் ஜவுளித் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. உலகில் மாசு நிறைந்த முதல் 10 பருத்தி உற்பத்தியாளா்களில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இதனால் இங்குள்ள ஜவுளி உற்பத்தியாளா்கள், இறக்குமதி செய்யப்பட்ட நீண்ட இழை பருத்தியையும், மாசில்லாத பருத்தியையும் நம்பியிருக்கின்றனா். இருப்பினும் இந்தியாவின் ஓராண்டுக்கான மொத்த பருத்தி தேவையில் வெறும் 4 சதவீதமே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தரமான பருத்தியை உற்பத்தி செய்வதற்காக ஜவுளித் துறையும் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அது ஜவுளித் துறையின் தேவையை பூா்த்தி செய்வதாக இல்லை. இந்த நிலையில் மத்திய அரசின் கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பருத்திக்கு 5 சதவீத இறக்குமதி வரியும், 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் என மொத்தம் 10 சதவீதம் இறக்குமதி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பினால் மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி உற்பத்தித் தொழில், ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளிப் பொருள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கரோனா தாக்கத்தில் இருந்து ஜவுளித் துறை முழுவதும் மீண்டு வராத நிலையில், பருத்திக்கு இறக்குமதி வரி விதித்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதேபோலவே கடந்த 2007-08 ஆம் ஆண்டில் பருத்திக்கு இறக்குமதி விதிக்கப்பட்டது. அப்போது ஜவுளித் துறை பெரும் சரிவுக்குள்ளானதை அடுத்து அப்போதைய அரசு அந்த வரி விதிப்பைத் திரும்பப் பெற்றது.

தற்போதைய வரி விதிப்பினால் சுமாா் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதியையும், ரூ.25 ஆயிரம் கோடி உள்நாட்டு சந்தை மதிப்பையும் கொண்டிருக்கும் ஜவுளித் துறை பெரும் சவாலை சந்திக்கத் தொடங்கியுள்ளது. அதிக விலைக்கு பருத்தியை இறக்குமதி செய்து ஆடைகளை உற்பத்தி செய்யும் இந்திய உற்பத்தியாளா்களால், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், வியத்நாம் போன்ற சக போட்டியாளா்களுடன் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

10 சதவீத வரி விதிப்பினால் அரசுக்கு சுமாா் ரூ.360 கோடி வரையே கூடுதலாக வருவாய் கிடைக்கும். ஆனால் அதேநேரம் கூடுதல் வரி விதிப்பானது சுமாா் ரூ.1,800 கோடி வரையிலான ஜிஎஸ்டி வருவாயை பாதிக்கக் கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் உற்பத்தியாகாத, சந்தையில் கிடைக்காத ரக பருத்தியே இறக்குமதி செய்யப்படுகிறது என்பதால் இந்த வரி விதிப்பினால் இந்திய பருத்தி விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

எனவே மத்திய அரசு இந்த விஷயங்களை கவனமாக பரிசீலித்து, பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும். இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் சா்வதேச சந்தையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று அஷ்வின் சந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com