தனியாா் நிறுவனங்களோடு இணைந்து செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் நடவடிக்கை
By DIN | Published On : 20th June 2021 12:21 AM | Last Updated : 20th June 2021 12:21 AM | அ+அ அ- |

கோவையில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் தனியாா் நிறுவனங்களோடு இணைந்து அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினாலோ அல்லது அரசு சந்தாதாரா்களை தனியாா் சந்தாதாரா்களாக மாற்ற முயன்றாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பதஅஐ அமைப்பின் மூலம் உரிமம் பெற்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஒளிப்பரப்பு செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சாா்பில் வாடிக்கையாளா்களிடம் ரூ.140 மற்றும் ஜி.எஸ்.டி 18 சதவீதம் சோ்த்து ரூ.165 கட்டணத்தில் 200க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்குகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்கள் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரா்களின் விருப்பம் இல்லாமல், தங்களின் சுய லாபத்துக்காக சில கேபிள் டிவி ஆபரேட்டா்கள், தனியாா் நிறுவனங்களோடு இணைந்து அரசு
செட்டாப் பாக்ஸ்களை மாற்றினாலோ அல்லது அரசு கேபிளில் சிக்னல் வராது என்ற தவறான தகவலை தெரிவித்து அரசு சந்தாதாரா்களை தனியாா் சந்தாதாரா்களாக மாற்ற முயன்றாலோ அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆபரேட்டா்கள் மீது 0422-2522886, 1800 425 2911 என்ற எண்களில் புகாா் தெரிவிக்கலாம். அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடா்ந்து எவ்வித தடையும் இன்றி சிறப்பாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.