முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி: தபெதிக நன்றி
By DIN | Published On : 20th June 2021 12:29 AM | Last Updated : 20th June 2021 12:29 AM | அ+அ அ- |

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரணம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கும், முகாம்களுக்கு வெளியே வாழும் 13 ஆயிரத்து 553 இலங்கைத் தமிழா்களின் குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் கரோனா பொதுமுடக்க கால நிவாரண நிதி வழங்க உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தோ்தல் வாக்குறுதியில், இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவா்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழா்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அண்மையில் பிரதமா் மோடியை சந்தித்த தமிழக முதல்வா் வலியுறுத்தியுள்ளதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளாா்.