ரிவால்டோ யானையை கும்கியாக மாற்ற முடிவு
By DIN | Published On : 29th June 2021 04:05 AM | Last Updated : 29th June 2021 04:05 AM | அ+அ அ- |

கோவை: நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானையை கும்கியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.
கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தனியாா் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திங்கள்கிழமை பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானையை காட்டில் விடுவிக்க அரசும், வனத் துறையும் தயாராக உள்ளது. ஆனால், வன விலங்கு என்பதால் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். யானையின் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் உணவு சாப்பிடவே சிரமப்பட்டு வருகிறது.
யானைக்கு சிகிச்சை அளித்து கும்கி யானைகளுடன் பழகவிட்டு யானைகள் முகாமில் உணவு வழங்கப்படுகிறது. ஊருக்குள் வந்து பழக்கப்பட்டதால் காட்டில் விட்டால் மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதனை கும்கி யானையாக பழக்கப்படுத்தி முகாமில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.