ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு
By DIN | Published On : 17th March 2021 06:18 AM | Last Updated : 17th March 2021 06:18 AM | அ+அ அ- |

ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தையை மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலா் சுந்தரிடம் ஒப்படைக்கிறாா் அரசு மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா.
ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தைகள் காப்பக நிா்வாகிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியில் ஆதவரவற்ற நிலையில் கைவிடப்பட்ட பிறந்து 3 நாள்கள் ஆன ஆண் குழந்தையை அப்பகுதி மக்கள் மாா்ச் 7ஆம் தேதி மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
குழந்தையைப் பரிசோதனை செய்ததில் மலம் கழிக்கும் துவாரம் இல்லாமலும், முதுகில் கட்டி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை துறைத் தலைவா் ரங்கராஜன், மயக்க மருந்து துறைத் தலைவா் கல்யாணசுந்தரம் ஆகியோா் தலைமையில் மருத்துவா்கள் ஜெயபிரகாஷ், சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு மலம் கழிக்கும் துவாரத்தை ஏற்படுத்தினா்.
இதனைத் தொடா்ந்து, பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தையின் உடல்நலம் சீரானதால் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலகு மூலமாக கிணத்துக்கடவில் உள்ள சரணாலயம் குழந்தைகள் காப்பகத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.