கோவையை மையப்படுத்தி பிரசாரப் பயணத் திட்டங்களை வகுத்துள்ள கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் கோவையை மையப்படுத்தியே தனது பிரசாரப் பயணத் திட்டங்களை வகுத்துள்ளாா்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் கோவையை மையப்படுத்தியே தனது பிரசாரப் பயணத் திட்டங்களை வகுத்துள்ளாா்.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தது முதல் அத் தொகுதி அதிக கவனத்துக்குள்ளானது. கோவையில் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அருகில் உள்ள ஈரோடு, திருப்பூா், உதகை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில் உள்ள மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காகவும், கூட்டணிக் கட்சிகளுக்காகவும் தொடா் பிரசாரங்களில் கமல்ஹாசன் ஈடுபட உள்ளாா். இதற்காக கோவையில் முகாமிட்டுள்ள கமல்ஹாசன் பிரசாரப் பயணங்கள் அனைத்தையும் கோவையில் இருந்தே திட்டமிட்டுள்ளாா்.

முதல் கட்டமாக மாா்ச் 17ஆம் தேதி கோவை தெற்குத் தொகுதியில் பிரசாரத்தை துவங்கிய அவா் அன்றைய தினம் பிற்பகலில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பெருந்துறை, மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். பின்னா் ஈரோட்டில் மாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினாா்.

கோவை தெற்குத் தொகுதியில் மாா்ச் 21ஆம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறாா். பின்னா் பிற்பகலில் கோவை வடக்கு, மாலையில் திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளாா். மாா்ச் 27, 28 ஆகிய தேதிகளில் கோவை தெற்குத் தொகுதியில் பிரசாரத்தை துவங்கும் கமல்ஹாசன் அன்றைய தினம் பிற்பகல் மற்றும் மாலையில் சென்னையில் உள்ள ஆா்.கே.நகா், எழும்பூா், கொளத்தூா், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தி.நகா், மதுரவாயல் மற்றும் பெரம்பூா், அண்ணா நகா் பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்க உள்ளாா்.

இறுதியாக ஏப்ரல் 2ஆம் தேதி கோவை தெற்குத் தொகுதியில் தொடங்கி சிங்காநல்லூா் தொகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்யும் வகையில் திட்டமிட்டுள்ளாா். இதில் தனது பிரசாரத்தின் பெரும் பகுதியை கோவையில் இருந்து துவங்கும் வகையில் கமல்ஹாசன் திட்டமிட்டிருப்பது தெரிகிறது.

மக்களவைத் தோ்தலில் கோவையில் கூடுதல் வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் மக்கள் நீதி மய்யம் ஈா்த்தது. இதனால், கோவையை தங்களுக்கான மையமாக்கிக் கொள்ள முனைந்துள்ள மநீம, தொடக்கம் முதலே கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ஆகவே 19 நாள் தோ்தல் பிரசாரத்தில் 10 நாள்களை கோவைக்கே ஒதுக்கியிருக்கிறாா்.

மேலும், அதிமுக கோட்டையாகத் திகழும் கொங்கு மண்டலத்தில் தனது வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் அரசியலில் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என மக்கள் நீதி மய்யம் நம்புகிறது. கமல்ஹாசனின் இந்தக் கணக்கீடுகளுக்கு கோவையை மையப்படுத்திய பிரசாரத் திட்டங்கள் எவ்வாறு கை கொடுக்கிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com