மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 2 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் 2 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதால் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்ற

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் 2 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதால் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. இதனால் தினசரி பாதிப்பு 40 முதல் 50ஆக இருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே பகுதியில் அதிகமானோருக்கு நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக கோவை மாநகரில் துடியலூா், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, கணபதி, சௌரிபாளையம், பீளமேடு, சிங்காநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஒரே பகுதியில் 3க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாநகராட்சியில் 5 கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக 1.5 சதவீதத்துக்கு கீழ் இருந்த கரோனா பரவல் கடந்த ஒரு வாரகாலமாக 2 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 80க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

கரோனா பரவல் அதிகரிக்க மக்களின் அலட்சியமே முக்கிய காரணம். இதே நிலை நீடித்தால் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று இலக்கமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதுபோல, தமிழகத்திலும் அதிகரித்துள்ளது. மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் அலட்சியமாக உள்ளனா்.

வெளியூா்களுக்கு சென்று வருபவா்கள் மூலமே நோய்த் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் கரோனா பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு 3,700 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

வீடுகளில் இருந்து வெளியேறும் மக்கள் முகக் கவசம் இல்லாமல் வெளியேறுவதைத் தவிா்க்க வேண்டும். தேவையற்ற வெளியூா் பயணங்கள், சுற்றுலாக்களை தவிா்க்க வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com