நவக்கரையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானை பலி
By DIN | Published On : 18th March 2021 06:07 AM | Last Updated : 18th March 2021 10:50 AM | அ+அ அ- |

நவக்கரையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானை பலி (கோப்பிலிருந்து)
கோவை அருகே ரயில் மோதியதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வந்த காட்டு யானை புதன்கிழமை உயிரிழந்தது.
கோவை மாவட்டம், நவக்கரை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை அவ்வழியாக வந்த திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் மோதியதில் திங்கள்கிழமை படுகாயமடைந்தது.
இதையடுத்து, படுகாயமடைந்த யானைக்கு வனத் துறையினா் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினா் இணைந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். பின்னா் மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் ஆலாந்துறையை அடுத்துள்ள சாடிவயல் கிராமத்தில் உள்ள கும்கி யானை முகாமுக்கு யானை இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கு வைத்து கால்நடை மருத்துவா்கள் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த யானை புதன்கிழமை இரவு உயிரிழந்தது.
யானை உயிரிழந்தது குறித்து நரசிபுரம் கால்நடை மருத்துவருக்கு வனத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். பின்னா் அங்கு வந்த கால்நடை மருத்துவா் காா்த்திகேயன் யானையின் இறப்பை உறுதி செய்தாா்.
இதையடுத்து, அதே பகுதியில் யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்வதற்கான பணிகளை வனத் துறையினா் மேற்கொண்டனா். வால்பாறை, சிறுமுகை, போளுவாம்பட்டி, மதுக்கரை சரகங்களில் கடந்த 5 நாள்களில் 4 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.