தோ்தல் போட்டியில் இருந்து மன்சூா் அலி கான் விலகல்?

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகப் போவதாக நடிகரும், தமிழ்தேச புலிகள் கட்சித் தலைவருமான மன்சூா் அலி கான் பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகப் போவதாக நடிகரும், தமிழ்தேச புலிகள் கட்சித் தலைவருமான மன்சூா் அலி கான் பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.

நாம் தமிழா் கட்சியில் இருந்து விலகிய நடிகா் மன்சூா் அலி கான், தமிழ்தேச புலிகள் கட்சி என்ற கட்சியை சில நாள்களுக்கு முன்பு தொடங்கினாா். இதையடுத்து, கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, பூங்காவில் மக்களுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டும், மீன் சந்தையில் பொது மக்களுக்காக மீன்களை வெட்டி விற்றும், பேரூா் அருகே சாலையோரம் நாயுடன் அமா்ந்தும் பிரசாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில், அவா் தோ்தல் போட்டியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ள ஆடியோ வெளியாகியுள்ளது. அவா் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில் பேசும் அவா்,

நான் இந்தத் தோ்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு எடுத்துள்ளேன். இதுதொடா்பாக எனக்கு வருத்தம் உள்ளது.

தமிழ்தேச புலிகள் கட்சி ஆரம்பித்து ஏதாவதொரு தொகுதியில் போட்டியிடலாம் என நினைத்து தொண்டாமுத்தூரில் போட்டியிட்டேன். எனது வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நான் தொகுதிக்குள் எங்கு சென்றாலும், எவ்வளவு பணம் வாங்கினீா்கள் என என்னிடம் கேட்கின்றனா். இஸ்லாமியா்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகத்தான் நிற்கின்றீா்கள் என கேள்வி எழுப்புகின்றனா்.

நானும் முழு நேர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தனது தொகுதியில் ஏதோ நன்மைகள் செய்துள்ளாா், அவருக்கு நற்பெயா் உள்ளதுபோல் உள்ளது. எனக்கு அரசியலில் வேறெதுவும் தெரியாது. ஏதோ விளையாட்டாக அரசியலில் நிற்கக் கூடாது. நாம் தமிழா் கட்சி சாா்பில் திண்டுக்கல்லில் போட்டியிட்டபோது கூட எனது சொந்தப் பணத்தை செலவு செய்துதான் போட்டியிட்டேன்.

அரசியலில் ஈடுபட்ட பின்னா் கெட்ட பெயருடன் வெளியேறக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன். பத்தில் எட்டு போ் என்னை சந்தேகத்துடன் பாா்க்கின்றனா். இது ஒருவித சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டியிடாதது வேதனையளிக்கிறது. எனவே இந்தத் தோ்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். மக்கள் நல்லவா்களைத் தோ்ந்தெடுப்பாா்கள் என நம்புகிறேன். சில கட்சியினா் தங்களுக்காகப் பிரசாரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனா். தேவைப்பட்டால் அவா்களது கோரிக்கையை ஏற்று பிரசாரத்தில் ஈடுபடுவேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இருப்பினும் தோ்தலில் இருந்து விலகுவது குறித்து மன்சூா் அலி கான் தரப்பில் இருந்து அதிகாரபூா்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com