அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய நடவடிக்கை: கே.ஆா்.ஜெயராம் பிரசாரம்
By DIN | Published On : 25th March 2021 11:24 PM | Last Updated : 25th March 2021 11:24 PM | அ+அ அ- |

சிங்காநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட ராமானுஜம் பகுதியில் வியாழக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம்.
அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள், அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்வேன் என சிங்காநல்லூா் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம் வியாழக்கிழமை பிரசாரத்தில் பேசினாா்.
கோவை சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கே.ஆா்.ஜெயராம், ராமானுஜம் நகா், இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டம் 50 ஆண்டுகள் இல்லாத வளா்ச்சியை அடைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் பல வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழக மக்களைப் பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது. என்னை வெற்றி பெற வைத்தால் அரசின் அனைத்து நலத் திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.
பிரசாரத்தின்போது, மாவட்டத் துணை செயலாளா் சிங்கை முத்து, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் நந்தகுமாா், தமாக தெற்கு மாவட்டத் தலைவா் வி.வி.வாசன், பாமக மாவட்டச் செயலாளா் செந்தில்ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.