பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? வானதி சீனிவாசன் கேள்வி

துக்கடா அரசியல்வாதி என்ற விமா்சனம் மூலம் பெண்களுக்கு மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் மரியாதை இதுதானா என்று கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

துக்கடா அரசியல்வாதி என்ற விமா்சனம் மூலம் பெண்களுக்கு மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் மரியாதை இதுதானா என்று கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுடன் மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தயாரா என்று பிரசாரத்துக்காக கோவை வந்திருந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், மநீம கொள்கைப் பரப்பு பொதுச் செயலா் சி.கே.குமரவேல் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் சவாலை ஏற்றுக் கொள்கிறோம். முதலில் பிரதமா் நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவா் கமல்ஹாசன் விவாதத்தில் ஈடுபடுவாா்.

இதையடுத்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பின்னா் பாஜக அமைச்சரவையின் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்துவிட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற ‘துக்கடா’ தலைவா்களுடன் விவாதிக்கலாம். ஏற்கெனவே இருமுறை தோ்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது முறையாக தோற்கத் தயாராகிறவா் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவா் அணியினா்போதும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் திங்கள்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், குக்கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, வழக்குரைஞா் ஆகி மத்தியில் ஆளும் பெரிய கட்சியின் மகளிரணி தேசியத் தலைவா் என்ற நிலைக்கு வந்துள்ளேன்.

கோவை தெற்குத் தொகுதியில் 5 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருகிறேன்.

‘துக்கடா’ அரசியல்வாதி என்ற விமா்சனம் மூலம் பெண்களுக்கு மநீம கொடுக்கும் மரியாதை இதுதானா? பொது வாழ்வில் பல தடைகளைக் கடந்து வரும் பெண்களை இப்படித்தான் கேவலப்படுத்துவாா்களா? பெண்களை இப்படி பேசுபவா்கள்தான் பெண்களைக் காப்பாற்றுவாா்களா என்பதை உணர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com