ஊழல் செய்ய, மக்கள் பணத்தை அபகரிக்க விடமாட்டேன்

எனது தொகுதியில் யாரும் ஊழல் செய்யவும், மக்கள் பணத்தை அபகரிக்கவும் விடமாட்டேன் என்பது உள்ளிட்ட 9 உறுதிமொழிகள் அடங்கிய

எனது தொகுதியில் யாரும் ஊழல் செய்யவும், மக்கள் பணத்தை அபகரிக்கவும் விடமாட்டேன் என்பது உள்ளிட்ட 9 உறுதிமொழிகள் அடங்கிய பத்திரத்தில் வேட்பாளா்களிடம் கையெழுத்துப் பெற்று வருகிறது கோவை மாவட்ட பொது நல அமைப்புகளின் கூட்டமைப்பு.

ஊழல் எதிா்ப்பு இயக்கம், சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப், ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்த இந்த கூட்டமைப்பு சாா்பில், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஒரு உறுதிமொழிப் பத்திரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதில், சட்டப் பேரவை உறுப்பினராக நான் தோ்வு செய்யப்பட்டால் ஊழல் எனது தொகுதிக்குள் நுழைந்துவிடாமல் உன்னிப்பாக கண்காணித்து ஒழித்துக்கட்ட முயற்சிப்பேன். கருவூலத்தில் இருந்து தொகுதிக்கு செலவிடப்படும் ஒவ்வொரு பைசாவும் மக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதுடன், பொதுப் பணி என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை யாரும் அபகரிக்க விடமாட்டேன்.

மக்கள் வரிப் பணத்தில் இருந்து சம்பளம் உள்ளிட்ட சகல வசதிகளையும் பெறும் அரசு அலுவலா்கள், ஊழியா்கள் அனைவரும் சட்ட விதிகளுக்குள்பட்டு மக்கள் நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்றுவதைக் கண்காணித்து உறுதி செய்வேன், மதுப் பழக்கத்தினால் சண்டை சச்சரவுகள், கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் நடப்பதால், மதுவிலக்கை அமல்படுத்துவது ஆட்சிபுரியும் அரசாங்கத்தின் அத்தியாவசிய சமுதாயக் கடமை என்பதை சட்டப்பேரவையில் வலியுறுத்துவேன்.

தொகுதியில் உள்ள நீா் நிலைகளை பாதுகாத்து, நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவை இருந்த பழைய நிலைக்குக் கொண்டு வரப் பாடுபடுவேன், மாதம் ஒரு நாள், மாதம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவேன், நேரடியாகவோ மறைமுகமாகவோ என்னுடைய அல்லது என் குடும்பத்தினருடைய முன்னேற்றத்துக்காக என் பதவியை கட்டாயம் பயன்படுத்த மாட்டேன், பேரவைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, சட்டப்பேரவையின் கௌரவத்தையும், மாண்பையும், மாட்சிமையையும் நிலைநிறுத்தப் பாடுபடுவேன் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டால் நான் இவற்றை கடைப்பிடிப்பேன் என்று மனசாட்சிப்படி உறுதியளிக்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிவத்தை கோவை மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு தனித்தனியாக அனுப்பி வருவதாகக் கூறியுள்ள ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் மாவட்டச் செயலா் என்.கே.வேலு, இந்த உறுதிமொழிப் படிவத்தில் சிங்காநல்லூா் தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா் டாக்டா் ஆா்.மகேந்திரன் மட்டும் கையெழுத்திட்டு கொடுத்திருப்பதாகவும், மற்ற வேட்பாளா்களும் கையெழுத்திடுவாா்கள் என்று நம்புவதாகவும் கூறியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com