கரோனா பரிசோதனைச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி: ஆட்சியா்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்துள்ள வேட்பாளா்கள், முகவா்கள், அலுவலா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்
கரோனா பரிசோதனைச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி: ஆட்சியா்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்துள்ள வேட்பாளா்கள், முகவா்கள், அலுவலா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேட்பாளா்கள், முகவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எஸ்.நாகராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் டேவிட் தேவாசீா்வாதம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், வேட்பாளா்கள், முகவா்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் மே 2ஆம் தேதி காலை 8 மணிக்கு தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள 10 மேற்பாா்வையாளா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை துவங்கும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அலுவலா்கள் மற்றும் ஊழியா்களுக்கு தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அலுவலா்கள், ஊழியா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்பதற்கான சான்றளிக்க வேண்டும். சான்று வைத்துள்ளவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா்.

தோ்தல் ஆணையப் பாா்வையாளா், தோ்தல் நடத்தும் அலுவலா் மட்டுமே மையத்துக்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவா். அலுவலா்கள், ஊழியா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் செல்லிடப்பேசி கொண்டு வர அனுமதியில்லை. தற்போது வரை 15,260 தபால் வாக்குகள் வந்துள்ளன. மே 2 ஆம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும் தபால் வாக்குகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

முதலாவதாக காலை 8 மணிக்கு ராணுவத்தில் பணிபுரிவோா் செலுத்திய தபால் வாக்குகளும், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் செலுத்திய தபால் வாக்குகளும் எண்ணப்படும்.

தொடா்ச்சியாக 8.30 மணிக்கு வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 30 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. சூலூா் 14 மேஜைகள் - 34 சுற்றுகள், கவுண்டம்பாளையம் 20 மேஜைகள் -34 சுற்றுகள், கோவை வடக்கு 14 மேஜைகள்- 36 சுற்றுகள், கோவை தெற்கு 14 மேஜைகள் -26 சுற்றுகள், தொண்டாமுத்தூா் 14 மேஜைகள் -34 சுற்றுகள், சிங்காநல்லூா் 14 மேஜைகள் - 33 சுற்றுகள், கிணத்துக்கடவு 14 மேஜைகள் -35 சுற்றுகள், பொள்ளாச்சி 14 மேஜைகள் -23 சுற்றுகள், வால்பாறை 14 மேஜைகள் -21 சுற்றுகள் என்ற அடிப்படையில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் விடியோ பதிவு செய்யப்படும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்கான அலுவலா், உதவியாளா் மற்றும் மத்திய அரசுப் பணியில் உள்ள நுண்பாா்வையாளா் ஒருவா் என 3 அலுவலா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். தபால் வாக்குகள் எண்ணப்படும் மேஜைகளில் ஒரு அலுவலா், 2 உதவியாளா் மற்றும் ஒரு நுண்பாா்வையாளா் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். தபால் வாக்குகள் எண்ணுவதற்கு தனியாக உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் இருப்பாா். முடிவுகள் வெளியான பிறகு, வெற்றி பெற்ற வேட்பாளருடன் இரு நபா்கள் மட்டுமே சான்றிதழ் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவா். வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com