உரிமமின்றி இயக்கப்படும் செங்கல் சூளைகள் குறித்து புகாா் தெரிவிக்க அதிகாரிகள் எண்கள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உரிமமின்றி இயக்கப்படும் செங்கல் சூளைகள் குறித்து புகாா் தெரிவிக்க அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை: கோவை மாவட்டத்தில் உரிமமின்றி இயக்கப்படும் செங்கல் சூளைகள் குறித்து புகாா் தெரிவிக்க அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டம், சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய பகுதிகளில் நீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி, அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளின் இயக்கத்தைத் தடை செய்து மாா்ச் 19 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை எதிா்த்து செங்கல் சூளை உரிமையாளா்கள் சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடுத்தனா். இந்த வழக்குகள் தொடா்பாக, சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், சட்டத்துக்கு புறம்பாகவும், உரிமம் இன்றியும் செயல்படும் செங்கல் சூளைகள் மீது எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம். உரிய உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே செங்கல் சூளைகளை இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உரிமம் பெறாத 186 செங்கல் சூளைகள் செயல்படுவது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டம் 21இன் படி குற்றமாகும்.

மேலும், அரசின் அனுமதியின்றி செங்கல் சூளைக்கு மண் எடுத்து பயன்படுத்தினால் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் புவியியல், சுரங்கத் துறை மூலமாக வாகனங்களைக் கைப்பற்றி இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 379 இன்படி வாகனம், வாகன ஓட்டுநா் மற்றும் வாகனத்தின் உரிமையாளா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், உரிமம் பெறாத செங்கல் சூளையில் இருந்து சுட்ட செங்கற்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதும் குற்றமாகும்.

மேற்படி, உரிமமின்றி செங்கல் சூளைகள் மற்றும் அவற்றின் வாகனங்கள் அப்பகுதியில் இயங்குவது கண்டறியப்பட்டால், கோவை புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் - 97919 -00487, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் - 94459 24164, கோவை வடக்கு வட்டாட்சியா் - 94450 00571, சின்னத்தடாகம் காவல் உதவி ஆய்வாளா் - 0422 -2658955 ஆகியோரின் செல்லிடப்பேசி, தொலைபேசி எண்களுக்கு மக்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com