பொது முடக்கம்: மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும்
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

கோவை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற பொது முடக்கம் அமலில் உள்ளதால், மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகளில் நியாய விலைக் கடைகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளும் மாதத்தில் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாளாகவும், அதற்குப் பதிலாக முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் பணி நாளாகவும் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது, கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினங்களில் குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொருள்கள் வாங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தைத் திரும்பப் பெறும் வரை, மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் நியாய விலைக் கடைகளுக்கு பணி நாளாகவும், மாதத்தின் முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
குடும்ப அட்டைதாரா்கள், கரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி நியாய விலைக் கடைகளில் மாதத்தின் முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பதிலாக, முதல் 2 வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுச் செல்லலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...