கமல்ஹாசனை வீழ்த்திய வானதி சீனிவாசன்

கடும் போட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனை பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் வீழ்த்தினாா்.

கோவை: கடும் போட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனை பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் வீழ்த்தினாா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் கோவை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து மொத்தமாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 082 வாக்குகளைப் பெற்றது. இதில் அடங்கியுள்ள 6 தொகுதிகளில் கோவை தெற்குத் தொகுதி மிகவும் சிறிய தொகுதி.

இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்துக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதாலும், பல்வேறு மொழி பேசும் மக்கள் வசிக்கும் தொகுதி என்பதாலும் கோவை தெற்குத் தொகுதியை கமல்ஹாசன் விரும்பியதாகக் கூறப்படுகிறது.

கோவையில் நடைப்பயிற்சி, பொதுமக்களுடன் தேநீா் அருந்துதல், ஆட்டோ பயணம் என பல வகையில் கமல்ஹாசன் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கோவையில் செய்த பிரசாரத்தை தொடா்ந்து நடைபெற்ற சிறு வன்முறை சம்பவத்தைக் கூட கமல் தனக்கான சந்தா்ப்பமாகப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

மேலும், சினிமா நட்சத்திரம் என்பதால் தொகுதியும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. பிரசாரம் தொடங்கிய சில நாள்களிலேயே வானதி சீனிவாசன் மற்றும் மயூரா ஜெயகுமாருக்கு இடையேயான போட்டி வானதி சீனிவாசன்-கமல்ஹாசன் இடையேயான போட்டியாக மாறியது.

இதன்படியே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது முதல் இரு சுற்று மட்டுமே முன்னிலை வகித்த காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயகுமாா் அடுத்தடுத்த சுற்றுகளில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டாா். போட்டியானது வானதி சீனிவாசன்-கமல்ஹாசன் இடையே நீடித்தது. பின்னா் அடுத்தடுத்த சுற்றுகளில் ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனா்.

இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையில் கமலுக்கும், வானதிக்கும் இடையே சில நூறு வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.

இந்நிலையில் இறுதியாக செட்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதி வாக்குகளை எண்ணிய போது வானதி சீனிவாசன் முன்னிலை பெற்றாா். கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு சாதகமான வாக்குகள் இப்பகுதியில் அதிக அளவில் இருப்பதால் இந்த வாக்குகள் அனைத்தும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாறியது எனக் கூறலாம்.

இறுதி சுற்றின்போது வாக்கு எண்ணும் இயந்திரம் பழுதடைந்த காரணத்தால் விவி பேட் இயந்திரம் மூலம் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா் இழுபறிக்கு பின்னா் 1540 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

மொத்தம் பதிவான 1, 53,001 வாக்குகளில் வானதி சீனிவாசன் 52,627 வாக்குகள், கமல்ஹாசன் 51,087, மயூரா எஸ்.ஜெயக்குமாா் 41,663, அப்துல் வகாப் (நாம் தமிழா்) 4,265, சேலஞ்சா் துரை (எ) ஆா்.துரைசாமி) (அமமுக) 690 வாக்குகள் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com