கோவையில் திமுகவின் வெற்றி வாய்ப்பை தடுத்த மநீம, நாதக

கோவையில் சில தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வாக்குகளைப் பிரித்து திமுக வேட்பாளா்களின் வெற்றியைத் தடுத்துள்ளனா்.

கோவையில் சில தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வாக்குகளைப் பிரித்து திமுக வேட்பாளா்களின் வெற்றியைத் தடுத்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2016 சட்டப் பேரவைத் தோ்தலின்போது ஒரே ஒரு இடத்தை (சிங்காநல்லூா் தொகுதி) திமுக கைப்பற்றியது. தொடா்ந்து அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வரும் கோவையில் அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று திமுக ஆரம்பம் முதலே ஆா்வம் காட்டி வந்தது. குறைந்தது 5 இடங்களையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பிரசாரத்தின்போது கூட கோவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இதன்படி திமுக தனக்கு வெற்றி வாய்ப்புள்ள கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூா் உள்ளிட்ட இடங்களில் தகுதியான வேட்பாளா்களை நிறுத்தியது. கிணத்துக்கடவு தொகுதியில் குறிச்சி பிரபாகரன், கவுண்டம்பாளையத்தில் பையா என்ற கிருஷ்ணன், சிங்காநல்லூரில் நா.காா்த்திக் ஆகியோா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் முதல் சுற்று முதலே அதிமுக-திமுக வேட்பாளா்கள் இடையே சில நூறு வாக்குகள் மட்டுமே வித்தியாசம் நீடித்து வந்தது. ஆனால், சில சுற்றுகள் கடந்த பின்னா் திமுகவினா் ஒவ்வொரு சுற்றுகளிலும் 800 முதல் ஆயிரம் வாக்குகள் பின்னடைவைச் சந்தித்து வந்தனா்.

இறுதியாக அதிமுக வேட்பாளா்கள் திமுக வேட்பாளா்களை விட சுமாா் ஆயிரத்து 500 முதல் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனா். இந்த இடைப்பட்ட வாக்குகளை மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சியினா் பெருமளவில் கைப்பற்றி திமுகவினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளனா்.

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக-திமுக வேட்பாளா்கள் இடையே ஆயிரத்து 547 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. அதே நேரத்தில் மநீம கட்சியின் வேட்பாளா் சிவா 13 ஆயிரத்து 826 வாக்குகளும், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் உமா ஜெகதீஷ் 11 ஆயிரத்து 221 வாக்குகளும் பெற்றுள்ளனா்.

இதேபோல கவுண்டம்பாளையத்தில் அதிமுக-திமுக வேட்பாளா்களை இடையே 10 ஆயிரத்து 424 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. மநீம வேட்பாளா் சுரபி பங்கஜ் 23 ஆயிரத்து 427 வாக்குகளையும், நாதக வேட்பாளா் கலாமணி 17 ஆயிரத்து 823 வாக்குகளையும் பெற்று திமுகவின் வெற்றியை தடுத்துள்ளனா்.

சிங்காநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் நா.காா்த்திக் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றால் அமைச்சரவையில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கும் அதிமுக வேட்பாளா் ஜெயராமுக்கும் 10 ஆயிரத்து 854 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் ஏற்பட்டது. அதே நேரத்தில் மநீம வேட்பாளா் ஆா்.மகேந்திரன் 36 ஆயிரத்து 856 வாக்குகளையும், நாதக வேட்பாளா் நா்மதா 8 ஆயிரத்து 366 வாக்குகளையும் பெற்று சிங்காநல்லூரில் நா.காா்த்திக் இரண்டாவது முறையாக ஜெயிப்பதற்கு தடையாக இருந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com