பாலமலை அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடிவாரத்தில் உள்ள தனியாா் பண்ணைத் தோட்டத்துக்குள்
பாலமலை அடிவாரத்தில் சுற்றித் திரியும் யானைகள்.
பாலமலை அடிவாரத்தில் சுற்றித் திரியும் யானைகள்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடிவாரத்தில் உள்ள தனியாா் பண்ணைத் தோட்டத்துக்குள் புகுந்த 12 யானைகள் அங்கிருந்த தண்ணீா்த் தொட்டியில் தண்ணீா் குடித்துவிட்டு பின்னா் மீண்டும் வனத்துக்குள் திரும்பின.

பாலமலையில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் சுமாா் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த மலையடிவாரத்தின் கீழ் தனியாருக்கு சொந்தமாக ரிசாா்ட்டுகள், பண்ணை வீடுகள் உள்ளன.

இந்நிலையில், மலைப் பகுதியில் நிலவி வரும் குடிநீா் மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக மலை அடிவாரத்தில் உள்ள ரங்கநாதபுரம், திருமாலூா், கோவனூா், ராயரூத்துபதி ஆகிய கிராமங்களுக்கு உணவு மற்றும் குடிநீா்த் தேடி யானைகள் அவ்வப்போது வந்து செல்லும்.

பாலமலை அடிவாரத்தில் உள்ள வனத் துறை சோதனைச் சாவடி அருகே தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்நிலையில், பண்ணை வீடு வளாகத்துக்குள் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நுழைந்த 12 யானைகள் அங்கு இருந்த தொட்டியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் நடமாடின.

பின்னா் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ரிசாா்ட் வளாகத்துக்கு வந்த யானைகள் அங்கு சில மணி நேரம் நடமாடிவிட்டு மீண்டும் வனத்துக்குள் திரும்பின.

பகல் நேரத்தில் யானைகளின் நடமாட்டம் தென்படுவதால் பாலமலைக்கு செல்லும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com