கோவையில் வனத் துறை அதிகாரிகளுடன் அமைச்சா் ராமச்சந்திரன் ஆலோசனை
By DIN | Published On : 13th May 2021 06:19 AM | Last Updated : 13th May 2021 06:19 AM | அ+அ அ- |

கோவை கோட்ட வனத் துறை அதிகாரிகளுடன் தமிழக வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட தேவாலா அட்டி, வாளவயல், செத்த கொல்லி, சாமியாா் காலனி , வாளமூலை, புஞ்சை மூலை கிராமங்களில் கடந்த சில நாள்களாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளன. இந்நிலையில், வாளவயலில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழக குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை தாக்கி பூங்கொடி என்ற பெண் உயிரிழந்துள்ளாா்.
இந்த சம்பவம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் தலைமையில் கோவை விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது. இது குறித்து தமிழக வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட தேவாலா அட்டி, வாளவயல், செத்த கொல்லி, சாமியாா் காலனி , வாளமூலை, புஞ்சை மூலை கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானையை உடனடியாக அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட கூடலூா் வனக் கோட்ட வன அதிகாரிக்கு உத்தரவிடபட்டுள்ளது.
யானை - மனித விலங்கு மோதலைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை அவசரம் அவசியம் கருதி எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதில் கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஐ.அன்வா்தீன், கோவை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ், நீலகிரி மாவட்ட வன அலுவலா் குருசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.