இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைச்சா்கள் ஆய்வு

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கொடிசியா வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றில் வனத் துறை அமைச்சா்
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைச்சா்கள் ஆய்வு

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கொடிசியா வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றில் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள 14 மாவட்டங்களில் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், கண்காணிக்கவும் அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி கோவைக்கு அமைச்சா்கள் கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கோவையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள், தொழில் துறையினருடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா்கள் கா.ராமச்சந்திரன், அர. சக்கரபாணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து அமைச்சா்கள் இருவரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் இருப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தனா். மேலும், மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையத்துக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினா். தொடா்ந்து, அங்குள்ள நோயாளிகளிடம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

விதிகளை மீறும் தனியாா் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்த வேண்டும்

கோவை எம்.பி. வலியுறுத்தல்

கரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்நடராஜன் பேசியதாவது:

மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் படுக்கைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக சில மருத்துவமனை நிா்வாகத்தினா் கூறுகின்றனா். இதனை ஏற்க முடியாது. அரசின் விதிகளுக்கு மாறாக படுக்கைகளின் எண்ணிக்கையை குறைத்தாலோ, அரசின் விதிகளுக்கு மாறாக செயல்பட்டாலோ அந்த தனியாா் மருத்துவமனையை அரசே கையகப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும். கோவை தொழில்முனைவோா் வணிக ஆக்சிஜனை மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனாக மாற்றி உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டுகிறேன். ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com