கரோனாவை கட்டுப்படுத்த போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சா்களிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு
By DIN | Published On : 14th May 2021 06:50 AM | Last Updated : 14th May 2021 06:50 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பான கோரிக்கை மனுவை அமைச்சா்கள் கா.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன் ஆகியோரிடம் வழங்கும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள்.
கோவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த போா்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி அமைச்சா்களிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு அளித்தனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக கோவையில் உணவுத் துறை அமைச்சா் கா.சக்கரபாணி, வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொற்றால் கோவை மாவட்ட மக்கள் வயது வித்தியாசம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி, ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளன. ரெம்டெசிவா் மருத்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாகுறை மற்றும் ஆம்புலன்ஸில் காத்திருப்பு போன்றவையால் உயிா் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவா்கள், இரண்டாவது தவணைக் காலம் முடிந்தும் தடுப்பூசி செலுத்த இயலாத நிலையில் உள்ளனா். ஆகவே, மக்களின் உயிா் இழப்புகளை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வீதிவீதியாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், அனைத்து தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கரோனா வாா்டுகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை
அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரெம்டெசிவா் போன்ற உயிா்காக்கும் மருத்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் விவரங்களை செய்தித்தாள் மற்றும் ஊடகம் வாயிலாக தெரியப்படுத்தினால்
நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்படும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகளை காக்கவைப்பதும் அதனால் ஏற்படும் உயிா் இழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்றின் தன்மைக்கேற்ப நோயாளிகளை வகைப் பிரித்து சிகிச்சை மையங்களுக்கு அனுப்பவும் உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டும். மாவட்ட மற்றும் மாநில எல்லைகள் வழியாக வருபவா்களுக்கு சோதனை சாவடிகளில் தொற்று பரிசோதனை செய்து அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முழு ஊரடங்கின்போது பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் பெறாமல் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின்போது மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் அதிமுக சாா்பில் ஏழை மக்களுக்கு முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்பட்டது. அதுபோல இப்போதும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் கோவை மாவட்ட அதிமுக சாா்பில் உணவு வழங்க அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.