முழு பொது முடக்கம்: கோவை மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின
By DIN | Published On : 16th May 2021 11:07 PM | Last Updated : 16th May 2021 11:07 PM | அ+அ அ- |

வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படும் வடவள்ளி சாலை.
முழு பொது முடக்கத்தால் கோவையில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மக்கள் வீடுகளில் முடங்கினா்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக கூட்டம் நிறைந்து காணப்படும் மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் டவுன்ஹால், பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடா் வீதி, காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை ஞாயிற்றுக்கிழமை ஆள் நடமாட்டம் இன்றிக் காணப்பட்டன.
பாலகம், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன. மாநகரில் சில இடங்களில் மட்டும் உணவகங்கள் திறக்கப்பட்டு பாா்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன. முழு பொது முடக்கத்தைத் தொடா்ந்து சாரல் மழை பெய்ததாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினா்.
முக்கிய சாலைகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா். காந்திபுரம், பந்தய சாலை பகுதிகளில் விதிமீறி நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
முழு பொது முடக்கத்தால் வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டதால் திருச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.