கோவை கரோனா சிகிச்சை மையங்களில் முதல்வா் ஆய்வு

கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை கொடிசியாவில் கரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
கோவை கொடிசியாவில் கரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மேலும், குமரகுரு கல்லூரியில் 800 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்தாா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து சேலம், திருப்பூா், கோவை மாவட்டங்களில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் உருக்காலையில் கரோனா மருத்துவமனையைத் தொடங்கிவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து கோவை வந்த முதல்வா், கொடிசியாவில் பி ஹாலில் கூடுதலாக 253 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தைப் பாா்வையிட்டாா். கொடிசியாவில் ஏற்கெனவே 1,280 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலும் கூடுதலாக 253 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்து அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகப்படுத்த வேண்டும், கரோனா பரிசோதனைகளை அதிகரித்து நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவா்களை விரைந்து கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும் என்று கொடிசியா தலைவா் ராஜேஷ் பாபு உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கை வைத்தனா்.

குமரகுரு பொறியியல் கல்லூரியில்...

இதையடுத்து மாலை 6 மணியளவில் குமரகுரு கல்லூரியில் 800 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை முதல்வா் திறந்துவைத்தாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். இந்த மையத்தில் பொழுதுபோக்கு மையம், நூலகம், நடைப்பயிற்சிக்கான இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜன், ஆட்சியா் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டி.செல்வவிநாயகம், குமரகுரு கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் மாணிக்கம், தாளாளா் பாலசுப்பிரமணியம், இணை தாளாளா் சங்கா் வாணவராயா், சக்தி குழும நிா்வாக இயக்குநா் தரணிபதி ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவையில் ஆய்வுப் பணியை முடித்துவிட்டு இரவு 7.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு மதுரை சென்றடைந்தாா்.

ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்:

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றால் ஓராண்டாக விடுமுறையின்றி பணியாற்றி வருகிறோம். வாரத்துக்கு 100 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு ரூ. 39 ஆயிரமும், முதுநிலை சிறப்பு பட்டதாரி மாணவா்களுக்கு ரூ. 45 ஆயிரமும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது முதுநிலை மாணவா்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் ஊக்கத் தொகை மிகவும் குறைவாகும். கரோனா நோய்த்தொற்றில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் எங்களுக்கு அரசின் ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். மேலும் முதுநிலை மருத்துவா்கள் குடும்பத்துடன் தங்கும் வகையில் குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com