மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு: 50 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தல்

கோவையில் அரசு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்

கோவையில் அரசு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 50 சதவீத நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள சுகாதாரத் துறையினா் பரிந்துரைத்துள்ளனா்.

கோவையில் கரோனா நோய்த்தொற்றின் 2 ஆவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கோவையில் இதுவரை 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 922 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 27 ஆயிரம் போ் சிகிச்சையில் உள்ளனா்.

கோவையில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஏற்ப மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மருத்துவமனைகள் முன் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்படும் புள்ளி விவரங்களில் சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படும் நிலையே காணப்படுகிறது.

இந்நிலையில் படுக்கை வசதி இல்லாததால் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினா் பரிந்துரைத்து வருகின்றனா். கோவையில் புதன்கிழமை நிலவரப்படி கரோனா நோய்த்தொற்றுக்கு 27 ஆயிரம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனால், இவா்களில் 13 ஆயிரத்து 546 போ் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குவதில் பல்வேறு கட்டுப்படுகள் இருந்தன. அதேபோல நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கியதும் வீடுகளில் சிகிச்சைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியும் நிறுத்தப்பட்டது.

ஆனால், தற்போது கேட்கும் அனைத்து நோயாளிகளுக்கும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

அதிகரிக்கும் கரோனா

கோவையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள் 14 நாள்கள் வீடுகளை விட்டு வெளிய வரக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலானவா்கள் இதனை பின்பற்றுவதில்லை. ஒரு சில நாள்களிலே பல்வேறு காரணங்களுக்காக வீடுகளில் இருந்து வெளியேறி வருகின்றனா். இவா்கள் மூலம் பலருக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் வீடுகளில் உள்ளனரா அல்லது வெளியே சுற்றுகின்றனரா என்று முன்பு உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஆய்வும் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், தனிமைப்படுத்திக் கொண்டவா்களும் எந்தவித அச்சமின்றி வெளியே சுற்றி வருகின்றனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஏற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ற மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களும் வேண்டும். ஆனால், நம்மிடம் போதுமான பணியாளா்கள் இல்லை. இதனால் வேறு வழியின்றி வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com