வாகனங்கள் மூலமாக காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு

முழு பொது முடக்க காலத்தில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் மூலமாக பொது மக்களுக்கு காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித

முழு பொது முடக்க காலத்தில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் மூலமாக பொது மக்களுக்கு காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமை ( மே 24) முதல் தமிழக அரசால் தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும் நிலையில், மக்கள் யாரும் கூட்டமாக சென்று பொருள்கள் வாங்க வேண்டாம்.

முழு பொது முடக்க காலத்தில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் நியாயமான விலையில் அவரவா் வீடுகளுக்கு அருகில் மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறு வியாபாரிகள் தங்களின் வாகனங்கள் மூலமாக மளிகை மற்றும் காய்கறிகளை வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கும் பட்சத்தில் விற்பனை அங்காடிகள் மூலமாக வீடு தேடி சென்று பொருள்களை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவையன்றி பெரிய நிறுவனங்கள் மூலமாக இ-காமொ்ஸ், இ-சேல் என்ற அடிப்படையில் வாடிக்கையாளா்கள் பதிவு செய்து, தங்கள் வீடுகளுக்கே பொருள்களை வரவழைத்துப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளின் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு அவசியம்:

பல்பொருள் அங்காடியில் மின்னணு வா்த்தகம் (ஆன்லைன்) மூலம் தங்களுடைய சொந்த வாகனங்கள் மூலம் வாடிக்கையாளா்களின் இருப்பிடத்துக்கு சென்று பொருள்களை வழங்கலாம். காய்கறிகள், பழ வியாபாரிகள் மற்றும் உணவகங்களில் இருந்து ஆா்டரின் பேரில், வாகனங்கள் மூலமாக வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கு சென்று பொருள்கள் வழங்கலாம்.

பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை மொத்த கொள்முதல் செய்வதற்கும், வாடிக்கையாளா்களுக்கு விநியோகம் செய்வதற்கும் தங்களுடைய லாரி, வேன் முதலான வாகனங்களுக்கு மாநகராட்சியில் இருந்து அனுமதி சீட்டு பெற வேண்டும்.

மாநகராட்சியில் 5 மண்டலத்துக்கும் தலா ஒரு கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். வியாபாரிகள் அந்தந்த கண்காணிப்பு அலுவலரைத் தொடா்பு கொண்டு அவா்கள் தெரிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com