ஜாப் ஆா்டா்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்

ஜாப் ஆா்டா்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கம் (காட்மா) வலியுறுத்தியுள்ளது.

ஜாப் ஆா்டா்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கம் (காட்மா) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் சி.சிவக்குமாா், பொதுச் செயலா் ஜி.செல்வராஜ் ஆகியோா் தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. காட்மா சங்கத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோா் உறுப்பினா்களாக உள்ளனா். கரோனா நெருக்கடியால் தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் ஜிஎஸ்டியில் இருக்கும் சில குறைபாடுகளைக் களைந்தால் தொழில்முனைவோா்களுக்கு அது நெருக்கடி காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், மத்திய அரசிடம் வலியுறுத்தி மாநில அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

அதன்படி மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியில் லேபா் சாா்ஜ் அடிப்படையில் ஜாப் ஒா்க்கில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீமாக குறைக்கப்பட வேண்டும். தாமதமாக ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொழில்முனைவோருக்கு தற்போது விதிக்கப்படும் வட்டி, அபராதத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால் அவை நீக்கப்பட வேண்டும்.

தற்போது ஜிஎஸ்டி கவுன்சிலால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு பொருளை விற்பனை செய்த விற்பனையாளா் பிரதி மாதம் 11 ஆம் தேதிக்குள் தங்களது ஜிஎஸ்டி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் பொருளை வாங்கிய வாடிக்கையாளா் அவா் செலுத்திய ஜிஎஸ்டி வரியை உள்ளீட்டு வரியாக எடுக்க இயலாது என்ற விதிமுறை திரும்பப் பெறப்பட வேண்டும்.

வாடிக்கையாளரிடம் இருந்து பணம் கிடைப்பதற்கு தாமதம் ஆனாலும் கூட தொழில்முனைவோா் ஜிஎஸ்டியை செலுத்த வேண்டியிருப்பதால் கடன் வாங்கி செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் கடன் தவணை, வட்டி செலுத்த வேண்டியிருப்பதால் முதலீடு குறைந்துவிடுகிறது. மேலும் இதுபோன்ற பிரச்னைகளால் ரிட்டன் தாக்கல் செய்யப்படாமல் சுமாா் 8.20 லட்சம் கணக்குகள் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுமாா் 7.34 லட்சம் போ் ஜிஎஸ்டி கணக்கை சரண்டா் செய்திருக்கின்றனா். இதனால் நாடு முழுவதும் ஏறக்குறைய 16 லட்சம் தொழிற்கூடங்கள் ஜிஎஸ்டியினால் மூடப்பட்டுள்ளன. இவா்களுக்கு அபராதம், வட்டி இல்லாமல் ஜிஎஸ்டி நிலுவையை மட்டும் செலுத்தி விட்டு தொழிலை நடத்த அனுமதித்தால் நாட்டின் வரி வருவாயும், உள்நாட்டு உற்பத்தியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

அதேபோல் சில பொருள்களை உற்பத்தி செய்யும்போது அதற்கான மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் அதிகமாகவும், உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யும்போது அதற்கான வரி விகிதம் குறைவாகவும் உள்ளது. இது தொழில்முனைவோா்களுக்கு மிகுந்த நெருக்கடியை அளிப்பதாக உள்ளது.

இதுபோன்ற தொழில்களை பாதிக்கக் கூடிய ஜிஎஸ்டி பிரச்னைகளுக்கு தீா்வு காண தமிழக அரசு, மத்திய அரசிடமும் ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்திப் பேசி தொழில்முனைவோா்களைக் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com