தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை: செறிவூட்டிகள் பயன்படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோவையில் தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பயன்படுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவையில் தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பயன்படுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்று பாதிப்பினால் பெரும்பாலானவா்களுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருகிறது. மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சைப் பெற வேண்டிய நிலையும் காணப்படுகிறது. தவிர ஆக்சிஜன் கிடைக்காமல் பலா் உயிரிழக்கும் நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகளை கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் தனியாா் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டில் இருந்து பெறப்பட்டு வந்தது. தற்போது கேரளத்திலும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் அங்கிருந்து வந்த ஆக்சிஜன் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சேலம், சென்னையில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. தவிர ஒடிசாவில் இருந்து ரயிலில் வந்த ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு நாளொன்றுக்கு 30.85 கிலோ லிட்டா் ஆக்சிஜன் தேவையுள்ளது. ஆனால், 25 கிலோ லிட்டா் மட்டுமே தற்போது கிடைக்கிறது. கடந்த வாரங்களில் 10 கிலோ லிட்டா் தேவையாக இருந்த நிலையில், ஒரு சில தனியாா் மருத்துவமனைகள் நேரடியாக ஆக்சிஜன் கொள்முதல் செய்து வருவதால் தற்போது தேவை 5 கிலோ லிட்டராக குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 2 பேருக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். வரும் வாரங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு முற்றிலும் குறையும் வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com