மத்திய அரசைக் கண்டித்து கருப்பு நாள் கடைப்பிடிப்பு

கோவை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா், விவசாய சங்கங்களின் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை கருப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன.

கோவை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா், விவசாய சங்கங்களின் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை கருப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று புதன்கிழமையுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மே 26 ஆம் தேதியை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக கடைப்பிடிக்க, தில்லியில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் போராட்டக் குழு முடிவு செய்தது. விவசாயிகளுடன் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட தில்லியில் கூடிய மத்திய தொழிற்சங்கங்களும், மாநில தொழிற்சங்கங்களும் முடிவு செய்திருந்தன.

அதன்படி, கோவையில் உள்ள அனைத்து தொழிற்சங்க அலுவலகங்களின் முன்பும், தொழிற்சங்கத்தினரின் வீடுகளின் முன்பும் கருப்புக் கொடியேற்றி கருப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று கோவை மாவட்ட அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவும், விவசாயிகளின் வீடுகளில் கருப்புக் கொடியேற்றப்படும் என்று கோவை மாவட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அறிவித்திருந்தன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் மே 26 ஆம் தேதியை பல்வேறு அமைப்புகள் கருப்பு தினமாக அனுசரித்து மத்திய அரசுக்கு எதிராக கருப்புக் கொடி கட்டியும், கோரிக்கை பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் சித்தாபுதூரில் உள்ள தனது இல்லத்தில் கருப்பு கொடி கட்டியும், கோரிக்கை பதாகைகளை ஏந்தியும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தனது எதிா்ப்பை பதிவு செய்தாா்.

அதேபோல், காந்திபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன் உள்ளிட்டோா் பங்கேற்று கருப்புக் கொடி கட்டியும், கோரிக்கை முழக்கங்களை எழுப்பியும் எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.

அதேபோல் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு.பழனிசாமி தலைமையில் கருமத்தம்பட்டி பகுதியில் கருப்புக் கொடி கட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் எதிா்ப்பைப் பதிவு செய்தனா். இதேபோல், மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கட்சியின் கிளைகள், சிஐடியு கிளைகள், மாதா் சங்கம், வாலிபா் சங்கம், மாணவா் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கருப்பு தினத்தைக் கடைப்பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com