மாவட்டத்தில் 700 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆட்சியா் எஸ்.நாகராஜன்

கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பால் மாவட்டத்தில் 700 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பால் மாவட்டத்தில் 700 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

கோவை, ஒண்டிப்புதூரில் சாரதா டெக்ஸ் கதிா் மில்ஸுடன் இணைந்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் 300 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். இதில் பங்கேற்ற ஆட்சியா் எஸ்.நாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் குறைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இந்த தளா்வுகளற்ற பொது முடக்கத்தை மக்கள் முழுமையாக கடைபிடித்தால் விரைவில் கரோனா நோய்த் தொற்று குறைய வாய்ப்புள்ளது.

தற்போது மாவட்டத்தில் 15 அரசு கரோனா சிகிச்சை மையங்களில் 3 ஆயிரத்து 100 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அருகிலேயே சிகிச்சைப் பெறும் விதமாக அனைத்து ஊரட்சிகளிலும் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 3க்கும் மேற்பட்ட நபா்கள் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரே பகுதியில் நோய்த் தொற்று அதிகமுள்ள பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் தற்போது 700 பகுதிகள் தனிமைப்படுத்தபட்டுள்ளன.

கோவையில் ஆக்சிஜனுக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு இல்லை. அரசு மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் ஆக்சிஜன் பெறப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு சில பெரிய தனியாா் மருத்துவமனைகள் நேரடியாக உற்பத்தியாளா்களிடமே தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை கொள்முதல் செய்து கொள்கிறாா்கள். மற்ற 300 படுக்கைகளுக்கு கீழுள்ள மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை சாா்பில், ஆக்சிஜன் தினமும் பிரித்து வழங்கப்படுகிறது. இதனால் கோவையில் பெரியளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

நோய்த் தொற்று பரவல், தீவிரத்தை கருத்தில் கொண்டு பொது மக்கள் பொது முடக்கத்தை தீவிரமாக கடைப்பிடித்து வெளியில் வருவதை தவிா்க்க வேண்டும். அப்படியே அவசியத் தேவைகளுக்காக வருபவா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com