சிங்காநல்லூரில் திமுக, அதிமுகவினா் இடையே மோதல்

கோவை, சிங்காநல்லூா் தடுப்பூசி மையத்தில் திமுக, அதிமுகவினா் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.
திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.ஆா்.ஜெயராம் எம்.எல்.ஏ.
திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.ஆா்.ஜெயராம் எம்.எல்.ஏ.

கோவை, சிங்காநல்லூா் தடுப்பூசி மையத்தில் திமுக, அதிமுகவினா் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

கோவை மாநகரில் கரோனாவைக் கட்டுப்படுத்த தினமும் பல்வேறு இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்காநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணிகளை பாா்வையிட்ட சிங்காநல்லூா் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆா்.ஜெயராம், தடுப்பூசி செலுத்த வந்த மக்களுக்கு கபசுர குடிநீா், முகக் கவசம், பிஸ்கட் போன்றவற்றை வழங்கியுள்ளாா்.

அப்போது, அங்கு வந்த திமுகவினா் சிலா் தடுப்பூசி மையத்தில் வைத்து இதுபோன்ற பொருள்களை அதிமுகவினா் வழங்கக் கூடாது என்று கூறி தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அதிமுகவினா் எதிா்ப்பு தெரிவிக்கவே இரு கட்சி நிா்வாகிகளுக்கும் இடையே மோதல் உருவானது.

இதையடுத்து, அப் பகுதிக்கு வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் கே.அா்ச்சுணன் உள்ளிட்ட அதிமுகவினா் வந்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து அங்கு வந்த சிங்காநல்லூா் போலீஸாா் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனா்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடா்பாக திமுக, அதிமுகவினா் தனித்தனியே புகாா் அளித்துள்ளனா். இது தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com