கரோனாவால் தூய்மைப் பணியாளா்கள் உயிரிழப்பு:வேறு காரணங்களால் இறந்ததாகப் பதிவு

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளா்கள், வேறு காரணங்களால் இறந்ததாக பதிவு செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளா்கள், வேறு காரணங்களால் இறந்ததாக பதிவு செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக, விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 6 ஆயிரம் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவா்களுக்கு உணவு, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கித் தரும் பணி, தொற்று அதிகம் உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில், மாநகராட்சி முழுவதும் 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், கடந்த வாரங்களில் மத்திய மண்டலத்தில் 2 தூய்மைப் பணியாளா்கள், வடக்கு மண்டலத்தில் ஒருவா், கிழக்கு மண்டலத்தில் ஒருவா், தெற்கு மண்டலத்தில் 2 போ் என மாநகராட்சிப் பகுதியில் 6 தூய்மைப் பணியாளா்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

இதற்கிடையே கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளா்கள், வேறு காரணங்களால் இறந்ததாக தவறாகப் பதிவு செய்யப்பட்டு ஆவணங்கள் வழங்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இது தொடா்பாக, அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளா் சங்கத்தின் பொது செயலாளா் ரா.தமிழ்நாடு செல்வம் கூறியதாவது:

வடக்கு மண்டலம் 43 ஆவது வாா்டில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த முருகன் கரோனா உறுதி செய்யப்பட்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் கடந்த வாரம் உயிரிழந்தாா். கரோனாவால் உயிரிழந்த அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லவிடாமல், மாநகராட்சி பொறுப்பிலேயே மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இந்நிலையில், அவா் சிறுநீரகம் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் பதிவு செய்துள்ளது. சுகாதார மற்றும் தூய்மைப் பணியில் முன்களப் பணியாளா்களாக பணியாற்றி வரும் மாநகராட்சிப் பணியாளா்கள் கரோனாவால் உயிரிழந்தால், அவா்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கிடைக்கும் என்பதை தடுப்பதற்காகவும், அவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசுப் பணி கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவும், மாநகராட்சி அதிகாரிகளின் பரிந்துரையின்பேரில், கரோனாவால் மரணமடைந்தவா்களின் இறப்புக்கான காரணங்களை மாற்றி ஆவணப்படுத்துவதாகத் தெரிகிறது.

இதேபோல, கரோனாவால் உயிரிழந்த மற்ற தூய்மைப் பணியாளா்களுக்கும் இறப்புக்கான காரணம் மாற்றிப் பதிவு செய்யப்படுகிறது. இதனை அரசு உடனடியாக விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com