பண்டிகைக் கூட்டம்: கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு
By DIN | Published On : 06th November 2021 09:29 AM | Last Updated : 06th November 2021 09:29 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகைக் கூட்டம் காரணமாக கரோனா அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக 120 போ் முதல் 130 போ் வரை மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதனிடையே தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பொருள்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது. இதனால் நோய்த் தொற்று மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
இது குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கோவை கடைத் தெருக்களில் தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இக்கூட்டத்தால் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னா்தான் தெரியவரும். எனவே இந்த மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை சாா்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும். இதன் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டவா்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் விரைந்து தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்றாா்.