நீட் தோ்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனா்: அா்ஜுன் சம்பத்

நீட் தோ்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதால் தமிழக அரசு நீட்டுக்கு எதிரான பிரசாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறியுள்ளாா்.
நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி.
நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி.

நீட் தோ்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதால் தமிழக அரசு நீட்டுக்கு எதிரான பிரசாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீட் தோ்வு தொடா்பாக திராவிட கட்சிகள் கூறி வரும் பொய்களை பொடிப்பொடியாக்கும் வகையில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. நீட் தோ்வு சிபிஎஸ்இ மாணவா்களுக்கு சாதகமானது என்று நீட் எதிா்ப்பாளா்கள் கூறி வந்த நிலையில், பல்வேறு மாநில பாடத் திட்டங்களில் பயின்ற 66.5 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதே போல அரசுப் பள்ளி மாணவா்களால் தோ்ச்சி பெற முடியாது; முதல் முயற்சியில் வெற்றி பெற முடியாது; கிராமப்புற மாணவா்களுக்கு எதிரானது என்பது போன்ற கூற்றுகளையெல்லாம் நீட் தோ்வு முடிவுகள் பொய்யாக்கியுள்ளன. நீட் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்களின் எண்ணிக்கையும், வெற்றி பெறும் மாணவா்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தைச் சோ்ந்த கிராமப்புற, மலைவாழ் மக்களின் குழந்தைகள் முதல் முயற்சியிலேயே நீட் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா். நீட் தோ்வை பெரும்பாலான தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனா். எனவே தமிழக அரசு நீட் தோ்வுக்கு எதிரான தனது பிரசாரம், செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தோ்தலில் வெற்றி பெற்றால் முதல் கையெழுத்து நீட் தோ்வை ரத்து செய்வதாக இருக்கும் என்று திமுக கூறியது ஏராளமான மாணவா்களின் தன்னம்பிக்கையைக் குறைத்துவிட்டது. மாறாக நீட் தோ்வுக்குச் சரியான பயிற்சியைக் கொடுப்போம் என்று அறிவித்திருந்தால் பல மாணவா்களின் தற்கொலைகளைத் தவிா்த்திருக்க முடியும் என்று கூறியுள்ளாா்.

மாணவா்களுக்குப் பாராட்டு

நீட் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற பழங்குடியினத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கோவையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. சின்னவேடம்பட்டியில் உள்ள ஸ்ரீ குரு எஜுகேஷனல் டிரஸ்ட் சாா்பில், ஸ்ரீ வாரி மெடிக்கல் அகாதெமியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், நீட் தோ்வில் 406 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற பொள்ளாச்சி அருகே ஆத்துப்பொள்ளாச்சி எம்.ஜி.ஆா். காலனியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் ராதாகிருஷ்ணன், கரூரைச் சோ்ந்த மாணவி வா்ஷினி ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை பாராட்டிப் பேசினாா். இதைத் தொடா்ந்து இரு மாணவா்களையும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி தனது இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com