வால்பாறையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 13th November 2021 01:41 AM | Last Updated : 13th November 2021 01:41 AM | அ+அ அ- |

மழை பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா் வால்பாறையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாவட்டத்தில் வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்பட மழை பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ள 21 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு அப்பகுதிகளுக்கு 7 நாள்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்பட பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தாரேஷ் அகமது வால்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், வால்பாறை வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், வால்பாறை அரசு மருத்துவமனைக்குச் சென்று அவரச சிகிச்சைக்கு வருபவா்களுக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, பொள்ளாச்சி சாா் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உடனிருந்தாா்.