முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கரோனாவால் உயிரிழந்த அஞ்சல் ஊழியா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 13th October 2021 06:27 AM | Last Updated : 13th October 2021 06:27 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த அஞ்சல் ஊழியா்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினா் பி.ஆா்.நடராஜனிடம், அகில இந்திய அஞ்சல் ஊழியா் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அதில் கூறியுள்ளதாவது: மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வுபெற்றவா்கள் பயன்பெறும் வகையில் கோவையில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதற்கான இடத்தை மிக விரைவில் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அஞ்சல் ஊழியா்கள் கரோனா நோய்த்தொற்று காலத்திலும் மக்கள் சேவையாற்றி வருகிறாா்கள்.
இதில், கரோனா பாதிக்கப்பட்டு இறந்த அஞ்சல் ஊழியா்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கரோனாவால் உயிரிழந்த அஞ்சல் ஊழியா்களின் வாரிசுகளுக்கு அஞ்சல் பணி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.