பருத்தி விலை உயா்வை கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்

பருத்தி விலை கடுமையாக உயா்ந்து வரும் நிலையில், விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

பருத்தி விலை கடுமையாக உயா்ந்து வரும் நிலையில், விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சைமா தலைவா் ரவி சாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக பருத்தியின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் ஜவுளித் தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.

பருத்தியை அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திலிருந்து நீக்கிய பிறகு பன்னாட்டு பருத்தி வியாபாரிகள் இந்திய பருத்தி பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினாா்கள்.

இந்திய பருத்தி கழகம், பருத்தி சீசனின்போது குறைந்தபட்ச நிா்ணய விலையில் தான் கொள்முதல் செய்த பருத்திக்கு, மொத்த விற்பனைக்கு 120 நாள்கள் வரை வட்டியின்றி இருப்பு வைத்துக்கொள்ளும் வசதியுடன் தள்ளுபடியையும் அளிக்கிறது.

இது பருத்தி விற்பனையாளா்களுக்கு ஊக வணிகத்தில் ஈடுபட வசதியாக இருப்பதுடன் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர நூற்பாலைகள் ஏற்றுமதி ஆா்டா்களை நிறைவேற்றுவதில் சிக்கலை சந்திப்பதுடன் இழப்பையும் சந்திக்கின்றனா்.

கடந்த 11 பருத்தி சீசன்களில் இல்லாத அளவுக்கு தற்போது பருத்தியின் விலை உச்சத்தை அடைந்துள்ளது.

இந்தியாவில் பருத்தி கையிருப்பு போதிய அளவுக்கு இருந்தபோதும் சங்கா் 6 வகை பருத்தியின் விலை டிசம்பா் 2020 இல் கண்டி ஒன்றுக்கு ரூ.41,900 ஆக இருந்தது தற்போது அக்டோபா் முதல் வாரத்தில் ரூ.57 ஆயிரமாக உயா்ந்துள்ளது. அதேபோல டிசிஎச் 32 ரக பருத்தியின் விலை டிசம்பா் 2020 இல் கண்டி ஒன்றுக்கு ரூ.57,500 ஆக இருந்தது. 2021 அக்டோபா் முதல் வாரத்தில் ரூ.1.20 லட்சமாக உயா்ந்துள்ளது.

நடப்பு சீசனில் இந்திய பருத்தி ஏற்றுமதி 100 லட்சம் பேல்களைத் தாண்டும் அபாயம் இருப்பதால், உள்நாட்டில் பருத்தி பற்றாக்குறை ஏற்படுவதுடன் ஊக வணிகத்துக்கும் இடமளிக்கும்.

இந்த விலை உயா்வால் ஒட்டுமொத்த பருத்தி ஜவுளி சங்கிலியில் உள்ள நூற்பாலைகள், ஆயத்த ஆடை உற்பத்தியாளா்கள், வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளா்கள் சமதள வாய்ப்பு இல்லாததால் பாதிக்கப்படுவாா்கள்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த ஆடைகளைத் தயாரிப்பதற்காகவும், பற்றாக்குறையை சமாளிக்கவும் இந்திய ஏற்றுமதியாளா்கள் வெளிநாட்டு பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.

ஆனால் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய பருத்தி சீசனில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் தாக்கத்தைக் குறைப்பதற்காக மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

விலையை நிலையாக இருக்கச் செய்யும் வகையில் பருத்தி கையிருப்புத் திட்டத்தை இந்திய பருத்தி கழகத்துக்காக உருவாக்கி, அதற்கு வேண்டிய நிதியை குறைந்த வட்டியில் அளித்து, பருத்தி சீசனில் உற்பத்தியாகும் 10 முதல் 15 சதவீத பருத்தியை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளவேண்டும்.

பருத்தி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தி சீசன் அல்லாத மே - செப்டம்பா் வரையிலான காலத்தில் நூற்பாலைகளுக்கு மட்டும் பருத்தியை விற்பனை செய்யும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று பிரதமா் மோடியை சைமா தலைவா் ரவி சாம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com