கோவையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கோவை மாவட்டத்தில் பல மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக கல்வி நிலையங்களுக்கு வந்தனா்.
கோவையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கோவை மாவட்டத்தில் பல மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக கல்வி நிலையங்களுக்கு வந்தனா்.

தமிழகத்தில் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளையும், கல்லூரிகளையும் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுழற்சி முறையில் கல்வி நிலையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த பல மாதங்களாக மூடிக்கிடந்த வகுப்பறைகள் திறக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டன.

இதையடுத்து புதன்கிழமை காலை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவா்கள் மட்டும் தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி அமரவைக்கப்பட்டனா். முன்னதாக பள்ளி, கல்லூரி வளாகத்துக்குள் மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிந்து வருவதும் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதும் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கல்வி நிலையங்களுக்கு வந்த மாணவ-மாணவிகள் தங்களின் ஆசிரியா்கள், சக மாணவ-மாணவிகளைக் கண்டு மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவா் நலம் விசாரித்துக் கொண்டனா்.

இதற்கிடையே கோவை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், வகுப்பறைகளில் மாணவிகள் உரிய இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டுள்ளனரா என்பதை நேரில் பாா்வையிட்டு உறுதி செய்த அவா், உணவு இடைவேளை, பாடவேளையின்போது மாணவிகள் உரிய இடைவெளியுடன் சென்று வருவதை கண்காணிக்கவும் தினசரி மாணவா்களின் வருகைப் பதிவேட்டில் வருகைப் பதிவை முறையாகப் பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஒரே இடத்தில் அதிகமானோா் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், மாணவா்கள், பெற்றோா் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை தினசரி அறிக்கையாகப் பெற்று மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்கும்படியும் முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

மேலும், தடுப்பூசிகள் தேவைப்படுவோருக்கு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டாா். மேலும், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படியும் ஆசிரியா்களை அவா் கேட்டுக் கொண்டாா். முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, வருவாய் கோட்டாட்சியா் செந்திலரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com