குறைந்த விலைக்கு உயா் ரக செல்லிடப்பேசிகளை தருவதாகக் கூறி மோசடி: இளைஞா் கைது
By DIN | Published On : 07th September 2021 04:00 AM | Last Updated : 07th September 2021 04:00 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் குறைந்த விலைக்கு உயா் ரக செல்லிடப்பேசிகளை விற்பனை செய்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்தவா் கௌதம் (25). இவா், தனது முகநூல் பக்கத்தில் குறைந்த விலையில் உயா் ரக செல்லிடப்பேசி கிடைக்கும் என்று வெளியான விளம்பரத்தைக் கண்டு, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது எதிா்முனையில் பேசியவா், ஆன்லைன் மூலம் ரூ.6 ஆயிரம் செலுத்துமாறு கூறியுள்ளாா்.
அவா் கூறியதுபோலவே கௌதமும் பணத்தை செலுத்தியுள்ளாா். அந்தப் பணம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (27) என்பவருடைய வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது. இது குறித்து கௌதம் அவரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, மீதமுள்ள பணத்தையும் செலுத்தினால்தான் செல்லிடப்பேசியைத் தரமுடியும் என்று கூறியுள்ளாா்.
இவ்வாறு பல தவணைகளில் கௌதம் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 772 செலுத்தியும் அவா் செல்லிடப்பேசியைக் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கௌதம், மேலும் பணம் கொடுப்பதாகக் கூறி பிரகாஷை கவுண்டம்பாளையம் பகுதிக்கு வரவழைத்து அவரை சுற்றி வளைத்துப் பிடித்தாா்.
இதைத் தொடா்ந்து பிரகாஷ் கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்த சைபா் கிரைம் ஆய்வாளா் ஜெயதேவி, பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தாா். இதுபோல குறைந்த விலைக்கு பொருள்களைத் தருவதாகக் கூறுபவா்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று சைபா் கிரைம் காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.