பெரியகுளத்தில் கழிவுநீா் கலப்பதைக் கண்டறிய டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
By DIN | Published On : 10th September 2021 05:10 AM | Last Updated : 10th September 2021 05:10 AM | அ+அ அ- |

உக்கடம் பெரியகுளத்தில் கழிவுநீா் கலப்பதை டிரோன் கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட 8 குளக்கரைகளில், பொலிவுறு நகரம்( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், உக்கடம் பெரியகுளத்தில் மிதிவண்டிப் பாதைகள், பூங்கா, உணவகம், மிதக்கும் நடைபாதைகள், நடைப்பயிற்சி தளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குளக்கரையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க முடியவில்லை.
இதைத் தொடா்ந்து, பெரியகுளத்தில் கழிவுநீா் கலக்கும் பகுதிகளை கண்டறிய டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கழிவுநீா் கலக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதியில் மருந்துகள் தெளித்து, கழிவுநீரை சுத்திகரிக்க மாநகராட்சி சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக உக்கடம் பெரியகுளத்தில் டிரோன் மூலம் குளத்தில் கழிவுநீா் கலக்கும் இடத்தைக் கண்டறியும் செயல்முறை விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டு டிரோன் கேமராவின் பணிகள், அவை செயல்படும் விதம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.